ஈழத் தமிழர்களின் பிரச்னைக்காக தி.மு.க. அரசு கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், தமிழ் இனம் என்ற ஒரே மையத்தில் அனைவரும் இணையாமல், அரசியல் காரணங்களுக்காக சில கட்சிகள் புறக்கணித்ததால் பிரபாகரன் வருத்தம் அடைந்துள்ளதாகக் கூறுகிறார் இயக்குநர் சீமான்.
``ஈழத் தமிழர் பிரச்னையில் மத்திய அரசு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து ஆராய, தி.மு.க. அரசு அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தது. `இது கண்துடைப்பு நாடகம்' என்று பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க. புறக்கணித்தது. இதனைத் தொடர்ந்து ம.தி.மு.க., தே.மு.தி.க. பா.ஜ.க. ஆகிய கட்சிகளும் புறக்கணித்தன.
அ.தி.மு.க. எப்போதுமே ஈழத் தமிழர் பிரச்னையில் எதிர்ப்பு நிலையில்தான் இருந்துள்ளது. அவர்களோடு இணைந்து, அனைத்துக் கட்சிக் கூட்டத்தை ம.தி.மு.க.வும் புறக்கணிப்பதாக வைகோ அறிவித்ததும், மருத்துவர் அய்யா ராமதாஸ் என்னைத் தொடர்பு கொண்டு, `ஈழத் தமிழர்களுக்காக வைகோவின் முடிவை மறுபரிசீலனை செய்து கூட்டத்தில் பங்கேற்கச் சொல்லவேண்டும்' என்று கூறினார்.
உடனே, நான் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவை நேரில் சந்திக்க முயற்சி செய்தேன். அவர் மதுரையில் கட்சி நிதியளிப்பு விழாவில் இருப்பதாகத் தகவல் தெரிவித்தார். இதனால் அவரைச் சந்திக்க முடியவில்லை.
தமிழகத்தில் அரசியல் கருத்து வேறுபாடுகளைக் களைந்துவிட்டு, தமிழ் இனம் என்ற உணர்வோடு அனைவரும் ஒரே மையத்தில் இணைய வேண்டும் என்பதுதான் அண்ணனின் (பிரபாகரன்) ஆசை.
தமிழ் ஈழத்தின் கதவு மூடப்பட்டுள்ளது. அதனுடைய திறவுகோல் ஒவ்வொரு தமிழனிடத்திலும் உள்ளது. எனவே, நாம் ஒன்றுபட்டுத் திறக்கவேண்டிய நிலையில் உள்ளோம்.
இலங்கையில் ஒவ்வொரு நொடிப் பொழுதும் தமிழன் மரணத்தைச் சந்தித்து வருகிறான். உணவு மற்றும் மருத்துவ வசதியின்றி அவதிப்பட்டுவருகிறான்.
இந்த நிலையில், தாய்த் தமிழகத்தில் இருந்து என்ன முயற்சி செய்துகொண்டிருக்கிறார்கள் என்று ஈழத் தமிழர்கள் எதிர்பார்த்து வருவதாக அங்கிருந்து தகவல் வருகிறது. ஆனால் இங்கோ, தி.மு.க. அரசு கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தை சில கட்சிகள் புறக்கணித்துள்ளன.
அ.தி.மு.க. புறக்கணித்ததில் வியப்பு இல்லை. ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ புறக்கணித்ததுதான் உலகம் முழுவதும் உள்ள தமிழனின் நம்பிக்கையைக் குலைத்துள்ளது. வைகோவின் முடிவு கண்டு அண்ணன் (பிரபாகரன்) வருத்தம் அடைந்ததாக எனக்குத் தகவல் தெரிவித்தனர்.
தமிழீழ விடுதலைக்காக. தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளின் ஆதரவும் தேவை என்ற நிலைப்பாடு கொண்டவர் அண்ணன். குறிப்பாக, ஆளும்கட்சியின் ஆதரவை எப்போதும் எதிர்பார்ப்பார்.
ஜெயலலிதா ஆட்சியின்போதுகூட, `அவர் ஏன் நம்மை வெறுக்கிறார்? நமது விடுதலைப் போராட்ட உணர்வை ஜெயலலிதாவிற்குப் புரியும்படி எடுத்துச் சொல்லுங்கள்!' என்கிற ரீதியில்தான் பேசுவாராம். ஜெயலலிதாவிற்கு எதிரான நிலையை அண்ணன் பேசமாட்டாராம்.
தமிழகத்தில் உள்ள ஒட்டுமொத்த அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து குரல் கொடுத்தால்தானே மத்தியில் உள்ள காங்கிரஸ் அரசு ஏதாவது உதவ முன்வரும். இல்லையெனில், தேர்தல் கூட்டணிக் கணக்கை வைத்து காய் நகர்த்திச் சென்றுவிடும்.
தமிழகத்தில் ஒகேனக்கல் பிரச்னை, காவிரி பிரச்னைக்காக தமிழ்த் திரையுலகினர் மொழி, இனங்களைக் கடந்து தமிழர்களுக்காக ஒன்று திரண்டனர். தற்போது ஈழத் தமிழர்களுக்காக வரும் 19-ம் தேதி ஒன்று திரள்கின்றனர். இவர்களைப் போல், அரசியல்வாதிகளும் தங்களது கருத்து வேறுபாடுகளைக் களைந்து ஒன்றுதிரண்டிருக்க வேண்டும்.
முதல்வர் கருணாநிதியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால்தான் டாக்டர் அய்யா தி.மு.க. கூட்டணியில் இருந்து விலகினார். ஈழத் தமிழர்களுக்காக ஒன்று சேர அவர் கருணாநிதியின் அழைப்பை ஏற்றுக் கொள்ளவில்லையா? நடிகர் சரத்குமார் ஏற்றுக் கொள்ளவில்லையா? அதுபோல், அ.தி.மு.க.வும் ம.தி.மு.க.வும் புறக்கணிப்புக்குக் கூறிய கருத்தைக் கூட கூட்டத்தில் கலந்து கொண்டு அங்குதான் பதிவு செய்திருக்க வேண்டும். அப்படிச் செய்திருந்தால், உலகிலுள்ள எல்லா நாடுகளும் நம்மை திரும்பிப் பார்த்திருக்கும்!'' என்றார் சீமான்.
நன்றி
குமுதம் ரிப்போர்ட்டர்
Sunday, October 19, 2008
பிரபாகரன் வருத்தம்
Posted by தமிழ் at 5:28 AM 2 comments
Monday, September 29, 2008
தமிழ் சினிமா குப்பை: சீமான் ஆவேசம்
மதுரை : தமிழ் சினிமாக்களில் மொழி, கலை, கலாசாரம், பண்பாடு எதுவும் இல்லாமல் குப்பையாகி போனதால், குறும் படங்கள் அவசியமாகி விட்டது என சினிமா இயக்குனர் சீமான் பேசினார்.மதுரையில் தானம் அறக்கட்டளை சார்பில் நடந்த 4வது மேம்பாட்டு குறும்பட விழாவில் அவர் பேசியதாவது: திரைப்படத் துறையை சேர்ந்தவர்களை ராஜ்யசபா எம்.பி.,யாக தேர்வு செய்கின்றனர். இவர்கள் என்ன தியாகங்களை செய்துள்ளனர். மதுரை சின்னப்பிள்ளையை அனுப்பி வைத்திருந்தால் தேசத்திற்கு கவுரவம் கிடைத்திருக்கும்.
இன்றைய இளைஞர்களுக்கு பகத்சிங், சுபாஷ்சந்திரபோஸ் போன்றவர்கள் யார் என தெரியவில்லை. நடிகர்களுக்கு "புரட்சி' என்ற பெயரை அடைமொழியாக வைத்துள்ளனர். இவர்கள் என்ன புரட்சி செய்தார்களோ, எந்த நாட்டிற்கு "தளபதி', "கேப்டன்' என்பதும் தெரியவில்லை. நடிகர்களின் படங்களுக்கு பால் ஊற்றும் அவலம் இங்கு தான் உள்ளது. இருக்கின்ற பொழுதை நல்லபடியாக போக்குவதற்குத் தான் சினிமா என்ற நிலை மாறிவிட்டது. தமிழ் சினிமாக்கள் குப்பையாகி விட்டன. மொழி, கலை, கலாசாரம், பண்பாடு, ஏழ்மை என எதுவும் இல்லை. எனவே மக்களுக்கு இப்போது மாற்று ஊடகமாக குறும்படங்கள் அவசியமாகி உள்ளது. வணிக வாடை இல்லாமல் மக்களுக் கான படங்களாக குறும்படங்கள் உள்ளன. இவ்வாறு அவர் பேசினார். தானம் அறக்கட்டளை திட்ட இணையாளர் அமுதா வரவேற்றார். இயக்குனர் ராஜசேகர், மதுரை சின்னப்பிள்ளை, மம்மது உட்பட பலர் பங்கேற்றனர். ஒருங்கிணைப்பாளர் சிவகுமார் தொகுத்து வழங்கினார். ரங்கநாதன் நன்றி கூறினார்.
Posted by தமிழ் at 6:18 AM 0 comments